இயற்கை உணவுகளுக்கு மவுசு கூடுகிறது

Loading...

eccbd2d7-b93a-4050-98ae-1bc7f4d1013e_S_secvpf.gif

நல்லா இருக்கீங்களா….? என்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது நலம் விசாரித்துக் கொள்வது மரபு. இப்போது அந்த வார்த்தையுடன் கூடவே. சுகர் கண்ட்ரோல்ல இருக்கா…? முதுகுவலி, மூட்டுவலின்னு அவஸ்தை பட்டீங்களே…

இப்போ பரவாயில்லையா? என்று கேட்கும் அளவுக்கு பெரும்பாலானவர்கள் வலிகளோடும் வியாதிகளோடும் வாழ்கிறார்கள். மாத பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்கள் பலரது பட்ஜெட்டில் மாதம் தோறும் மருந்து, மாத்திரைகளுக்கும் தனியாக பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. காலம் எவ்வளவோ மாறி இருக்கிறது.

முன்பெல்லாம் வீடுகளில் பண்டிகை நாட்களில்தான் இட்லி அல்லது தோசையை பார்க்க முடியும். இன்று சிற்றுண்டி வகைகளில் நூற்றுக்கும் மேல் உள்ளன. பீசா, பர்கர் என்று நொறுக்கு தீனிகள் நூற்றுக்கணக்கில் வந்து விட்டன. சாப்பாட்டு வகையிலும் புரோட்டா, பிரியாணி, பாஸ்ட் புட் என்று பல வகைகள் வந்து விட்டன.

உணவில் புகுத்தப்பட்ட புதுமைகள் அனைத்தும் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவே அமைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு ஒத்துவராததாகவே உள்ளன. எந்த மருத்துவரிடம் போனாலும் கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுக்காதீங்க. நிறைய பழங்கள் சாப்பிடுங்கள், காய்கறி சாப்பிடுங்கள். முடிந்தவரை இயற்கை உணவாகவே சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று ஆலோசனை வழங்குகிறார்கள்.

ஆதி மனிதன் பழங்களை சாப்பிட்டு வாழ்ந்தான் என்று அறிகிறோம். ஆனால் இன்றைய தலை முறைக்கு பழங்கள் ஏளன பொருளாகிவிட்டன. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில் சோழம், கம்பு, பயிறு வகைகள் அதிகமாக உணவாக சாப்பிடப் பட்டது. கால மாற்றத்தில் சோளம் தின்பவர்கள் ஏளனமாக, ஏழையாக பார்க்கப்பட்டார்கள்.

இதனால் சமூக அந்தஸ்துக்காகவே அவர்கள் தங்கள் உணவு பழக்கவழக்கங்களை மாற்ற தொடங்கினார்கள். அது பெரும் ஆபத்தையும் கூடவே அழைத்துவரபோகிறது என்பது அப்போது அவர்களுக்கு விளங்க வில்லை. இப்போது உடல் ஆரோக்கிய குறைவுக்கு காரணம் உண்ணும் உணவும், உணவு முறைகளும்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் ரசாயன உரமாக யூரியா கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகு அம்மோனியாவில் இருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும் வந்தன. இந்த உரங்கள் மலிவாக கிடைத்ததோடு பயிர்களின் மகசூலும் அதிகமாக இருந்ததால் விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக செயற்கையான ரசாயன உரங்களுக்கு மாறினார்கள். பயிர்களுக்கு போடப்படும் உரங்களும், தெளிக்கப்படும் மருந்து வகைகளும் மனிதர்களின் உடலை பாதிக்க தொடங்கியது.

இப்போது மீண்டும் பழைய உணவு முறைகளுக்கு திரும்புகிறார்கள். உணவே மருந்து. மருந்தே உணவு என்று புரிந்து கொண்டதால் இயற்கை உணவுகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. ரசாயன கண்டுபிடிப்புகள் மற்றும் பயிர் உற்பத்தியில் முன்னிலை வகித்த அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மீண்டும் பழைய இயற்கை விவசாய முறைகளை கடைபிடிக்க தொடங்கி உள்ளன.

அங்கு தொடங்கிய இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மூரிலும் வளர்ந்து வருகிறது. காடு, கழனிகள் மீண்டும் பழமை அடையாளங்களை அணிய தொடங்கி உள்ளன. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கிய இயக்கம் வலுப்பெற்றுள்ளது.

செயற்கை உரம் போட்டு தயாராகும் உணவுகளை விட இயற்கை உரத்தில் விளைவிக்கப்படும் தானியங்கள், சிறு தானியங்கள் சாப்பிட்டால்தான் இனி வரும் காலங்களிலாவது நோய்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று டாக்டர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். அதனால்தான் பொது மக்களும் இயற்கை உணவின் பக்கம் திரும்ப தொடங்கி இருக்கிறார்கள்.

கடைகளில் ‘டீ’ குடிப்பதை கவுரவமாக கருதுவதும் தள்ளுவண்டியில் கூழ் குடிப்பதை கேவலமாக பார்ப்பதும் இருந்தது. ஆனால் இப்போது சர்வ சாதாரணமாக தள்ளுவண்டியில் விற்கும் கூழை ரசித்து ருசிக்கிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் கேழ்வரகு தோசை, கோதுமை தோசை, ராகி புட்டு என்ற பழைய உணவுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ஆரோக்கியம் கருதி இந்த வகை உணவுகளை சாப்பிடுபவர்கள் ஏராளம். இயற்கை உணவு கடைகள் நகரில் ஏராளம் முளைத்து விட்டன. இந்த கடைகளில் இயற்கை உரங்கள் போட்டு விளைவிக்கப்படும். அனைத்து வித தானியங்களும் கிடைக்கின்றன. வரகு, தினை, சோழம், சாமை, கம்பு, குதிரைவாலி, சிறுபயிறு, பருப்பு வகைகள், காய்கறிகள், அரிசி என்று எல்லாமே கிடைக்கின்றன.

விலை அதிகமாக இருந்தாலும் இந்த கடைகளில் விற்பனை அதிகம் நடக்கிறது. இயற்கை உணவகங்களும் பெருமளவில் திறக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் சென்னை மாநகராட்சியில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

இந்த உணவகங்களில் தூதுவாளை சூப், ஆவாரம் பூ சூப், கொள்ளு ரசம், வேப்பம் பூ ரசம், முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, ஆவாரம் பூ சாம்பார், நொறுக்கு தீனி வகைகளில் தினைஅல்வா, ராகி பிஸ்கட், எள்ளுருண்டை, வரகு பணியாரம் உள்ளிட்ட பலவிதமான மூலிகை உணவுகள் உள்ளது.

நம் நாட்டில் பரவிகிடக்கும் மூலிகைகள் பரவி வரும் எத்தகைய நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஆனால் அவைகளை நாம் கண்டு கொள்வதும் இல்லை. அவற்றின் சிறப்பும் தெரிவதில்லை. முடக்கத்தான் தோசை – மூட்டு வலிக்கு சிறந்தது என்றும், வல்லாரை தோசை நினைவாற்றலை வளர்க்கும் என்றும், வெந்தய தோசை உடலுக்கு குளிர்ச்சி என்றும் கூறப்படுகிறது.

நீண்ட ஆயுளையும், ஆரோக் கியத்தையும் தரும் மூலிகை பயிர்களை வளர்ப்போம். மூலிகை உணவுகளை சாப்பிடுவோம்.

சோற்றுக்கத்தாழை ‘குமரிப்பெண்’ :

சோற்றுக்கத்தாழை உடலுக்கு மிகவும் நல்லது. இதை மோரில் கலந்தும் குடிக்கலாம். தோலை நீக்கி விட்டு வள வள என்று இருக்கும் ஜெல்லியை நன்றாக கழுவி சாப்பிட்டால் உடல் அழகுகூடி இளமையான தோற்றத்தை கொடுக்கும். எனவே இதற்கு ‘குமரிபெண்’ என்ற புனை பெயரும் உண்டு. இந்த சோற்றுகத்தாழை சூப் சென்னையில் பல இடங்களில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

அடம் பிடிக்கும் குழந்தைகள் :

என்ன தான் இயற்கை உணவுகளுக்கு மவுசு கூடினாலும் குழந்தைகளும், இளவட்டங்களும் அதில் நாட்டம் கொள்ளவில்லை. நாற்பது வயதை கடந்தவர்கள் தான் துரத்தும் நோய்களுக்கு பயந்து இயற்கை உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் பல் முளைக்காத குழந்தை கூட குர்குரேவை நொறுக்குகிறது.

உளுந்தை வேக வைத்து பனை வெல்லம் போட்டு இடித்து கொடுத்தாலோ, சுக்குபால், முளை கட்டிய பயிறை கொடுத்தாலோ வேணாம்மா…! என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் அதிகம். இந்த குழந்தைகளிடம் இயற்கை உணவின் அவசியத்தை எடுத்து சொல்லி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடம் உள்ளது.

அப்படியானால் தான் வருங்காலத்தில் நமது சந்ததிகள் நம்மை போல் 50 வயது ஆனதும் அப்பாடா.. அம்மாடா… என்று சொல்லாமல் நோஞ்சானாக இல்லாமல் ஆரோக்கியமாக வாழும்.

Loading...
1017
-
100%
Rates : 3