பாதிப்பை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

Loading...

201611070725415417_Processed-foods-can-infect_SECVPF.gif

ஆலூடிக்கி, சுவீட் கார்ன், பரோட்டா, தால் மக்கானி, ஷாஹி பன்னீர், பாலக் பன்னீர், சன்னா மசாலா என பாக்கெட்டில் ரெடிமேடாக அடைப்பட்டு கிடைக்கும் உணவு பொருட்களின் பட்டியல் வெகு நீளம். அவைகளை கத்தரித்து கொதிக்கும் நீரில் கொட்டினால் போதும், மூன்றே நிமிடங்களில் உணவு வகைகள் தயாராகி விடும். அடிக்கடி உணவகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த வகை தயார் நிலையில் உள்ள உணவு வகைகளை வீட்டில் சமைத்து குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள். அதிலும் ஏதோ வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதும் என்ற நினைப்பில் இருப்பவர்கள் விரும்பி சுவைக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க அதில் அளவுக்கு அதிகமாக சோடியம் கலக்கப்படுகிறது. இது இதய நோய்களுக்கும், சிறுநீரக பாதிப்புக்கும் காரணமாகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கும் இது துணை புரிகிறது. இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் காய்கறி, பழங்கள் சாப்பிடுவது குறைந்து போகிறது. அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு எப்படி தயாரிக்கப்பட்டது? தூய்மையானதா? இல்லையா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். மேலும் ஓட்டல்களில் சுவையான உணவை சாப்பிட அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் பெரும்பாலானோர் இந்த வகை ‘ரெடிமேட்’ உணவுகளை வாங்கி சாப்பிட்டு தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எந்த சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டது? அதிலிருக்கும் காய்கறிகள், இதர பொருட்கள் சாப்பிட ஏற்றது தானா? தூய்மையாக, சுகாதாரமாக பேக்கிங் செய்யப்பட்டதா? உடலுக்கு தீமை விளைக்கும் விதத்திலான பொருட்கள் எதுவும் சேர்க்கப்பட்டுள்ளதா? போன்ற எதுவும் தெரியாமல் அவசரத்திற்கு அதை வாங்கி சாப்பிட்டு விட்டு உடலை கெடுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. காய்கறி சாப்பிடுவதன் பயன் அதில் இருப்பதில்லை.

ஆனாலும் வேறு வழி இல்லாமல் சில நேரங்களில் சாப்பிட வேண்டியிருக்கும். அவசர வேலை, திடீர் விருந்தாளிகள் வருகை, கடையடைப்பு போன்ற சூழ்நிலைகளின்போது சாப்பிட்டு கொள்ளலாம். ஆனால் இதையே வழக்கமாக்கிக் கொள்வது நல்லதல்ல என்கிறார்கள், மருத்துவர்கள். இன்று சிறுவயதிலேயே தோன்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு இதுபோன்ற உணவு வகைகளே காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இதுபோன்ற உணவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சாப்பிடுவதாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும்.

* காலாவதி தேதிக்கு சில நாட்கள் மட்டுமே இருந்தாலும் வாங்கி விடாதீர்கள். முக்கியமாக பால், தயிர், இறைச்சி வகைகளை காலாவதி தேதிக்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்லும் நேரங்களில் மட்டும் குறைந்த அளவில் இதனை பயன்படுத்துங்கள்.

* அந்த உணவு பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் சோடியம் அளவை கவனியுங்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் சோடியம் உட்கொள்ளலாம். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அளவு மீறினால் ஆபத்தாகி விடும்.

* நீங்கள் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலோரி, கொழுப்பு அளவு, ரசாயன கலவை விவரம் முதலியவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

* அன்றாடம் நிறைய பேர் சாப்பிடும் உணவு வகைகளான ப்ரெட், பட்டர், பிஸ்கெட் போன்றவற்றிலும் சோடியம் கலந்துள்ளது. அவைகளையும் குறைந்த அளவிலே சாப்பிடுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. அவசர கதியில் இயங்கும் மக்களுக்கு இது வரப்பிரசாதம்தான். ஆனால் இந்த வகை உணவுகளில் சத்துக்கள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை. அதனால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் தோன்றும் அபாயம் உருவாகிறது.

Loading...
552
-
Rates : 0