செழிப்பான வருமானம் தரும் செவ்விளநீர்! – மூன்றரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ.8 லட்சம்!

Loading...

p14a

மகசூல் வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

1 மரத்தில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 150 காய்கள்

நிலையான சந்தை வாய்ப்பு

விற்பனைக்கு அலைய வேண்டியதில்லை

ஒரு இளநீருக்கு குறைந்தபட்ச விலை ரூ.14

‘பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு, தென்னையைப் பெத்தால் இளநீரு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். பிள்ளைகளால் பெறும் நன்மைகளைவிட தென்னை மரம் மூலம் அதிக நன்மை கிடைக்கும் என்றுதான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தென்னை விவசாயிகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கடந்த பல ஆண்டுகளாகவே, தேங்காய் மற்றும் கொப்பரைக்குக் கட்டுப்படியான, நிலையான விலை கிடைப்பதில்லை.

இடைத்தரகர்கள், கலப்படத் தேங்காய் எண்ணெய் உற்பத்தி, வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்தல் எனப் பல காரணங்களால்தான் தேங்காய்க்கும், கொப்பரைக்கும் விலை கிடைப்பதில்லை என்று சொல்லப் படுகிறது. அதே நேரத்தில் இளநீர்க்கு எப்போதும் நல்ல விலை கிடைப்பதோடு, தொடர் சந்தை வாய்ப்பும் இருக்கிறது. அதனால்தான் பல தென்னைச் விவசாயிகள் இளநீர் தென்னை சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்போலோ.

சேலம் மாவட்டம், பேளூர் அருகே உள்ள புழுதிக்குட்டை, கண்ணுக்காரனூர் நெய்யமலை அடிவாரத்தில் இருக்கிறது, அப்போலோவின் தென்னந்தோப்பு. தோப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த அப்போலோவைச் சந்தித்தோம்.

படித்தது கால்நடை மருத்துவம்… செய்வது விவசாயம்!

“எங்க சொந்த ஊர், வனவாசிக்குப் பக்கத்துல இருக்கிற ஒட்டுப்பள்ளம் கிராமம். தாத்தா இங்க 60 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பிச்சதால இங்கேயே குடி வந்துட்டோம். என்னோட அப்பா, சேலம் அரசுக்கல்லூரியில் முதல்வரா இருந்தார். 22.07.1969-ம் தேதிதான் நான் பிறந்தேன். அன்னிக்குதான் அப்போலோ விண்கலத்துல பயணிச்சு நிலவில் காலடி வெச்சார், ஆர்ம்ஸ்ட்ராங். அதனாலதான், எனக்கு அப்போலோனு பேர் வெச்சார் அப்பா. நான் கால்நடை மருத்துவத்துல முதுகலைப்படிப்பு முடிச்சுட்டு மிலிட்டரில கால்நடை மருத்துவர் பதவிக்குத் தேர்வானேன். அதுக்கான பயிற்சியில் இருக்கிறப்போ, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போகவும் ராணுவ வேலையைக் கைவிட்டுட்டு ஊருக்கு வந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன்.

கூட்டு விவசாயம் செயற்கையில் சொந்த விவசாயம் இயற்கையில்!

தாத்தா சின்ன வயசுலேயே எங்களுக்கு விவசாயத்தைச் சொல்லிக் கொடுத்துட்டதால விவசாயத்து மேல எனக்கு அப்பவே ஆசை உண்டு. அதனாலதான், ஆர்வத்தோட விவசாயத்தை ஆரம்பிச்சேன். குடும்பத்தாரோட சேர்ந்து கூட்டா விவசாயம் செய்றப்போ, மொத்தமா ரசாயன விவசாயம்தான் செஞ்சிட்டு இருந்தோம். அப்புறம், 2010-ம் வருஷம் சொத்து பிரிச்சப்போ, எனக்கு 10 ஏக்கர் தென்னந்தோப்பும், 20 ஏக்கர் மேட்டுக்காடும்(மனாவாரி) கொடுத்தாங்க. உடனே நான் பஞ்சகவ்யா, தொழுவுரம், ஆட்டு எருன்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன்” என்ற அப்போலோ தொடர்ந்தார்.

பசுந்தாள் உரமிட்டு நெல் சாகுபடி!

“இயற்கை இடுபொருட்களைக் கொடுக்க ஆரம்பிச்சதும் தென்னை மரங்கள்ல நல்ல மாற்றம் தெரிஞ்சது. மேட்டுக் காடாக இருந்த 20 ஏக்கர் நிலத்தையும் சீர்படுத்தித் தக்கைப்பூண்டு, கொழிஞ்சின்னு பயிர் பண்ணி மடக்கி உழுது மண்ணை வளப்படுத்தினேன். அதுல கொஞ்ச நிலத்துல மட்டும் நெல் சாகுபடி செஞ்சிட்டிருந்தேன். தேங்காய்க்கு பெரிசா விலை இல்லாததால மீதி நிலத்துல தென்னையை மட்டும் நடவே கூடாதுனு முடிவோட இருந்தேன். மரப்பயிர் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான தகவல்களைச் சேகரிச்சிட்டு இருந்தேன்.

தாகம் தந்த திருப்பம்!

அந்தச் சமயத்துல ஒரு வேலைக்காகச் சேலம் போயிருந்தேன். அப்போ தாகம் எடுக்கவும், இளநி குடிக்கலாம்னு போனேன். இளநி கடைக்காரர் சாதா இளநி 20 ரூபா, செவ்விளநி 25 ரூபாய்னு சொன்னார். உடனே ‘இது மட்டும் ஏன் இவ்வளவு விலை’ன்னு கேட்டப்போ, ‘இதுல தண்ணி அதிகமா இருக்கும். சத்தானது. இந்த பகுதில   அதிகமா கிடைக்காது. இதைப் பொள்ளாச்சியில இருந்து வாங்கிட்டு வந்து விற்பனை செய்றேன். கோயில்கள்ல இளநி அபிஷேகத்துக்கு இந்த இளநியைத்தான் பயன்படுத்துறாங்க. அதனாலதான் இதுக்குக் கூடுதல் விலை’ன்னு சொன்னார்.

நான் அந்த இளநியைக் குடிச்சுப் பார்த்தேன். சுவையா இருந்துச்சு. அப்பவே எனக்கு, ‘இதுக்கு நல்ல விலை கிடைக்குதே… இதை நாமளும் சாகுபடி செஞ்சா என்ன’ன்னு தோணுச்சு. உடனே மரப்பயிர் சாகுபடி ஐடியாவை விட்டுட்டு இந்த ரக இளநி குறித்த தகவல்களைத் தேட ஆரம்பிச்சேன். இன்டர்நெட்லயும் அது சம்பந்தமான நிறைய தகவல்கள் இருந்துச்சு. மொத்தத்துல அதுக்கு நல்ல மார்க்கெட் இருக்குனு மட்டும் உறுதியா தெரிஞ்சது.

துணிந்து இறங்கினேன்…வெற்றி கிடைத்தது!

அப்புறம் நண்பர்கள்கிட்ட விசாரிச்சுப் பொள்ளாச்சியில் ஒருத்தர்கிட்ட இருந்து ‘சவக்காட் குட்டைத் தென்னை’ (Chavakkad Dwarf Coconut) இனத்துல ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மூணு ரகத்துலயும் சேர்த்து 350 கன்றுகளை வாங்கிட்டு வந்தேன். ஒரு ஏக்கருக்கு 100 கன்னுங்கிற கணக்குல மூன்றரை ஏக்கர்ல நடவு பண்ணினேன். எங்க ஏரியாவிலேயே அந்த இளநி ரகத்தை நான்தான் முதன் முதல்ல நடவு செஞ்சேன். அதைப்பார்த்த எங்க ஊர் விவசாயிகள், இது இளநிக்கு மட்டும்தான் ஆகும். தேங்காய்க்குப் பயன்படாது. இளநியா விற்பனை செய்ய முடியாட்டி நஷ்டமாகிடும்’னு சொன்னாங்க. ஆனா நான் அதுக்குக் கவலைப்படவேயில்லை. துணிஞ்சு இறங்கிட்டேன்” என்ற அப்போலோ தோப்புக்குள் அழைத்துச்சென்று மரங்களைக் காட்டிக்கொண்டே பேசினார்.

40 நாட்களுக்கு ஒரு வெட்டு!

“நட்ட மூன்றரை வருஷத்துல இளநி வெட்ட ஆரம்பிச்சுட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல விலை கிடைச்சது. விற்பனைக்கும் பிரச்னையேயில்லை. மொத்த வியாபாரிகள் தோப்புக்கே வந்து வெட்டி எடுத்திட்டுப் போயிடுறாங்க. 40 நாளைக்கு ஒரு தடவை காய்கள வெட்டுறேன். அடுத்து இதே ரகத்துல 150 கன்னுகளை வாங்கி நடவுசெஞ்சுட்டேன். இப்போ மொத்தம் 500 மரங்கள் இருக்கு. மொத்தம் அஞ்சரை ஏக்கர்ல செவ்விளநிதான் இருக்கு. எல்லாத்துக்கும் சொட்டுநீர் அமைப்புப் போட்டுதான் பாசனம் செய்றேன்.

குளிர் காலத்தில் விலை குறையும்!

என்னோட 10 ஏக்கர் தென்னந்தோப்புல தேங்காய் வெட்டி விற்பனை செய்றப்போ… ஒரு தேங்காய்க்கு 5 ரூபாய்ல இருந்து 7 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். ஆனா, இந்த இளநிக்கு 14 ரூபாய்ல இருந்து 17 ரூபாய் வரை விலை கிடைக்கிது. குளிர் காலங்கள்லயும், மழைக் காலங்கள்லயும் மட்டும்தான் விலை கொஞ்சம் குறையும். மத்த நாட்கள்ல எப்பவும் 15 ரூபாய்க்கு மேலதான் விற்பனையாகுது. அடுத்த வெட்டுக்கு வியாபாரி வந்து பார்த்துட்டு 16 ரூபாய் 50 காசுனு விலை பேசிட்டுப் போயிருக்கார்” என்ற அப்போலோ, வருமானம் குறித்துச் சொன்னார்.

ஒரு மரத்தில் 200 காய்கள்!

“ஒரு மரத்துல வருஷத்துக்குக் குறைஞ்சபட்சமா 150 இளநி கிடைச்சிடுது. சில மரங்கள்ல வருஷத்துக்கு 200 இளநிக்கு மேலகூட கிடைக்கிது. ரெண்டு வருஷமா, ஆரம்பத்துல நடவு செஞ்ச 350 மரங்கள்ல மட்டும்தான் இளநி வெட்டிட்டு இருக்கேன். மீதி 150 மரங்களை நட்டு ரெண்டரை வருஷம்தான் ஆகுது. இப்போ ஒவ்வொரு மரமா பாளை போட்டுட்டு இருக்கு. அடுத்த வருஷம் முழுமையா காய்ப்புக்கு வந்திடும். இப்போதைக்கு 350 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 55 ஆயிரம் காய்க்குக் குறையாம கிடைக்குது. ஒரு இளநிக்கு சராசரியா 15 ரூபாய்னு விலை வெச்சுக்கிட்டா 55 ஆயிரம் இளநிக்கு 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இடுபொருள், எரு வைக்க, உழவுன்னு வருஷத்துக்கு ஒரு மரத்துக்கு 100 ரூபாய்ங்கிற கணக்குல மொத்தம் 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதைக்கழிச்சா 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். ஒரு ஏக்கர்னு கணக்கு பண்ணினா வருஷத்துக்குக் கண்டிப்பா ரெண்டே கால் லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சிடும்” என்ற அப்போலோ நிறைவாக,

இளநீர் ரகத்தில் இரு மடங்கு வருமானம்!

“தென்னையைப் பொறுத்தவரைக்கும் இந்த வருமானம் கட்டுப்படியான வருமானம்தான். தேங்காய்க்கான தென்னை மரங்கள் வளர்த்து 2 ஏக்கர்ல சம்பாதிக்கிற வருமானத்தை, இளநி மரங்கள் மூலமா ஒரு ஏக்கர்லயே சம்பாதிச்சுட முடியுது. அதில்லாம இந்த ரகத் தென்னை மரங்கள் சீக்கிரமே காய்ப்புக்கும் வந்திடுது” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அப்போலோ, செல்போன்: 97875 47367


பருவமழைக்கு முன்னால் தென்னை நடவு!

வக்காட் குட்டை ரக இளநீர் தென்னையைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து அப்போலோ சொன்ன விஷயங்கள் இங்கே…

தென்னைக்கு வடிகால் வசதியுள்ள சரளை கலந்த செம்மண் நிலம் ஏற்றது. நடவு செய்யப் பருவ மழை தொடங்கும் அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். தேர்வு செய்த நிலத்தை உழுது, இரண்டரை அடி சதுரத்தில் 3 அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 25 அடி இடைவெளி விட வேண்டும். இந்தக் கணக்கில் ஒரு ஏக்கருக்கு 69 முதல் 72 குழிகள் வரை எடுக்கலாம். குழியை ஒரு மாதம் ஆறவிட வேண்டும். குழியில் தோண்டிய மண்ணோடு சம பங்கு ஆட்டு எரு அல்லது மாட்டு எருவைக் கலந்து ஒவ்வொரு குழிக்குள்ளும் முக்கால் அடி உயரத்துக்கு நிரப்ப வேண்டும். கோழி எருவைப் பயன்படுத்தக்கூடாது.

சொட்டுநீர் சிறந்தது!

பிறகு 6 மாதம் முதல் 8 மாத வயதுள்ள கன்றுகளைக் குழியின் நடுவில் வைத்து நெத்து மூடும் அளவுக்கு எரு, மண் கலவையைக் கொண்டு நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் அரைக்கிலோ வேப்பம் பிண்ணாக்கை இட்டு, மண் கொண்டு குழியை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தென்னைக்குச் சொட்டு நீர் அமைப்பது சிறந்தது. தென்னை அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர் என்பதால்… நிலத்தில் ஈரம் காயாத அளவுக்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

ஆண்டுக்கு இருமுறை இடுபொருள்!

ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது, பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு கன்றின் தூர் அருகிலும் இடுபொருள் இட வேண்டும். முதல் ஆண்டில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஒவ்வொரு முறையும் ஒரு மரத்துக்கு 4 கிலோ என்ற அளவில் தொழுவுரம் இட வேண்டும். இரண்டாம் ஆண்டில் ஒவ்வொரு முறையும் ஒரு மரத்துக்கு 8 கிலோ என்ற அளவில் தொழுவுரம் இட வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும் ஒரு மரத்துக்கு 20 கிலோ என்ற அளவில் தொழுவுரம் இட வேண்டும். ஒவ்வொரு முறையும் உரமிடும்போது மரத்தைச் சுற்றி வட்டப் பாத்தி எடுத்த பிறகுதான் உரம் இட வேண்டும். மழை நீர் மற்றும் பாசன நீர் பாத்திக்குள் சேகரமானால் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். ஆண்டுக்காண்டு பாத்தியின் சுற்றளவை அதிகரிக்க வேண்டும்.

பூச்சி, நோய்… கவனம்!

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, காண்டாமிருக வண்டு தாக்குதலும், குருத்தழுகல் நோயும் ஏற்படும். 40 நாட்களுக்கு ஒருமுறை, வேப்பங்கொட்டை, மாட்டுச் சிறுநீர் கலந்த கரைசலைத் தெளித்து வந்தால் இவ்விரு பிரச்னைகளையும் சமாளித்துவிடலாம். 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 2 கிலோ எண்ணெய் எடுக்காத வேப்பங்கொட்டையை நசுக்கிப் போட்டு 3 நாட்கள் ஊற வைத்து வடிகட்டி அக்கரைசலை தண்ணீர் கலக்காமல் மரத்தின் மீது செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.

இயற்கை விவசாயிகள் தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப பஞ்சகவ்யா உள்ளிட்ட இடுபொருட்களைத் தயாரித்தும் மரங்களுக்குக் கொடுக்கலாம். குட்டைரகச் செவ்விளநீர் மரங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாளை விட்டு மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் காய்க்கத் தொடங்கும். 4-ம் ஆண்டிலிருந்து முழு மகசூல் கிடைக்கும். இதே பராமரிப்பை தொடர்ந்து செய்து வந்தால் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பலன் எடுக்கலாம்.


கன்றுகள் எங்கு கிடைக்கும்?

டுமலைப்பேட்டை திருமூர்த்திமலை அருகே உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட சவக்காட் குட்டை ரகத் தென்னை கன்றுகள் மானிய விலையில் கிடைக்கின்றன. தற்போதைய நிலவரப்படி மானியம் கழிக்கப்பட்டு ஒரு கன்று 50 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. பல தனியார் நாற்றுப்பண்ணைகளிலும் இந்த ரகம் கிடைக்கிறது. 15 ஆண்டுகள் வயதான தாய் மரத்தில் இருந்து பெறப்பட்ட நெற்றில் வளர்க்கப்பட்ட 6 மாத வயதுக்கு மேற்பட்ட கன்றுகளைத் தேர்வு செய்வது அவசியம்.


நான் கற்ற பாடம்!

“ஆ
ரம்பத்தில் நடவு செய்தப்போ… கன்று விற்பவர் சொன்னது போல 20 அடி இடைவெளியில் நடவு செஞ்சிருந்தேன். அதனால மரங்களுக்கு இடையில் உழவு ஓட்டறதுக்குச் சிரமமாக இருந்துச்சு. அதனால, அடுத்து வாங்கிய கன்றுகளை 25 அடி இடைவெளியில் நடவு செஞ்சிருக்கேன். அதனால உழவு ஓட்டுறது சுலபமா இருக்கிறதோட, மரங்களின் வளர்ச்சியும் நல்லா இருக்கு. இடைவெளி அதிகமா இருக்கிறதால நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கிறதுதான் செழிப்பா இருக்கிறதுக்குக் காரணம். அதனால இந்த மரங்கள்ல மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்கிறார், அப்போலோ

Loading...
865
-
Rates : 0