கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்த ரூ.1.40 கோடியால் தோழிக்கு வந்த கதி

Loading...

கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்த ரூ.1.40 கோடியை தோழி மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய 5 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியதுடன், இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது…

நீண்ட கால தோழிகள்
கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையம் ஜி.எல்.வி. நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் போத்தனூரில் உள்ள தனியார் வங்கியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விசாலாட்சி (வயது 36). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விசாலாட்சியும், கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிலட்சுமியும் சிறுவயதில் இருந்தே தோழிகள்.

ஜோதிலட்சுமி தனக்கு பங்குச்சந்தையில் நல்ல பழக்கம் இருப்பதால், அதில் முதலீடு செய்து அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று விசாலாட்சியிடம் கூறி உள்ளார். அதை நம்பிய விசாலாட்சி முதலில் ரூ.50 ஆயிரத்தை ஜோதிலட்சுமியிடம் கொடுத்தார். ஒரு மாதம் கழித்து அந்த பணத்துக்கு வட்டியாக ரூ.2 ஆயிரத்து 500 விசாலாட்சிக்கு வழங்கப்பட்டது.

ரூ.1.40 கோடி
மேலும் பலரிடம் பணம் வாங்கிக்கொடுத்தால் மாதந்தோறும் தவறாமல் வட்டி கொடுப்பதாக ஜோதிலட்சுமி, விசாலாட்சியிடம் கூறினார். அதன்பேரில் அவர் தனது உறவினர், நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கி மொத்தம் ரூ.1 கோடியே 40 லட்சத்தை ஜோதிலட்சுமியிடம் கொடுத்தார். அதற்கு கடந்த ஒரு ஆண்டாக வட்டி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஜோதிலட்சுமி வட்டி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாலாட்சி அவரிடம் கேட்டபோது தற்போது பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துவிட்டதால் என்னிடம் பணம் இல்லை என்றும், பணம் கிடைக்கும்போது வட்டியை சேர்த்து கொடுக்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

திரும்ப கொடுக்கவில்லை
இவ்வாறு அவர் கடந்த 5 மாதங்களாக வட்டி கொடுக்கவில்லை. இதனால் விசாலாட்சிக்கு பணம் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு அவரை தொந்தரவு செய்ய தொடங்கினார்கள். இதனால் அவர் மீண்டும் தனது தோழியிடம் சென்று வட்டி பணத்தை கேட்டார். அப்போதும் அவர் அதே பதிலைதான் கூறியதுடன் பணத்தை கொடுக்கவில்லை.

வட்டியை கொடுக்க வேண்டாம், தான் கொடுத்த ரூ.1.40 கோடியை திரும்ப கொடுத்துவிடு என்று கேட்டதற்கு, பணத்தை கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாலாட்சி கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் இருரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ரூ.35 லட்சம் கேட்டு நோட்டீசு
இந்த நிலையில் நேற்று முன்தினம் விசாலாட்சிக்கு ஒரு நோட்டீசு வந்தது. ஜோதிலட்சுமி தான் வக்கீல் மூலம் அந்த நோட்டீசை அனுப்பி இருந்தார். அதில், தான் பணம் கொடுக்க வேண்டியது இல்லை, நீ தான் ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், அந்த பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து ஜோதிலட்சுமியிடம் கேட்டார். உடனே அவர் நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விசாலாட்சி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாலாட்சி வீட்டில் வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் தூக்கில் தொங்கிய அறையில் ஒரு கடிதம் இருந்தது. 5 பக்கத்தில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதை விசாலாட்சிதான் எழுதி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த கடிதத்தில் கூறி இருந்ததாவது:–

சிறுவயது முதல் நானும், ஜோதிலட்சுமியும் தோழிகள். எங்கு சென்றாலும் சேர்ந்துதான் செல்வோம். பங்குச்சந்தையில் பணம் போட்டால் அதிக வருமானம் கிடைக்கும். எனவே நீ உன்னால் முடிந்த பணத்தை வாங்கிக்கொடு, அதற்கு நான் வங்கி கொடுக்கும் வட்டியைவிட கூடுதல் வட்டி கொடுக்கிறேன் என்று ஜோதிலட்சுமி என்னிடம் கூறினார்.

அதனால் நான் பலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன். முதலில் ஒழுங்காக வட்டி கொடுத்து வந்த அவர் பின்னர் கொடுக்கவில்லை. இதனால் வட்டியை கொடுக்க வேண்டாம், அசலையாவது கொடு என்று கேட்டேன். அதற்கு அவர் நான் உனக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை, நீதான் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்.

5 பேர் காரணம்
தற்போது எனக்கு பணம் தேவைப்படுவதால் உடனடியாக பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உன்னை கேவலப்படுத்திவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் நான் பணம் வாங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. எனவேதான் நான் சாகப்போகிறேன்.

எனது சாவுக்கு எனது தோழி ஜோதிலட்சுமி, அவருடைய கணவர் சிவக்குமார், உறவினர்கள் மணிகண்டன், சிவபிரகாஷ், நித்யா ஆகியோர்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

5 பேர் மீது வழக்கு
அதன்பேரில் பேரூர் போலீசார் ஜோதிலட்சுமி, சிவக்குமார் உள்பட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Loading...
3224
-
100%
Rates : 1