எண்ணெய் இல்லா சமையல்

Loading...

எள் வேர்க்கடலை உருண்டை
ஸ்டஃப்டு இட்லி
ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சாட்
எண்ணெயில்லா ஊறுகாய்
பஞ்சாபி கடி
எண்ணெயில்லா வடை
பயறு அவல்
நட்ஸ் – ஹனி ரோல்ஸ்
தேங்காய் லட்டு
மில்லட் புட்டு
எண்ணெயில்லா பக்கோடா

ராஜஸ்தானி தால்“அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தினால்தான் ருசியான உணவுகளைச் சமைக்க முடியுமா, என்ன? ஒரு துளி எண்ணெய்கூட பயன்படுத்தாமலே சத்தும் சுவையும் மிகுந்த உணவுகளைச் செய்யலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர். இதோ, அனைவரும் சுவைக்கும் வகையில் அவர் அளிக்கும் ஆயில் ஃப்ரீ ரெசிப்பிகள்! 


எள் வேர்க்கடலை உருண்டை

தேவையானவை:
 கறுப்பு எள் – 1 கப்
 பச்சை வேர்க்கடலை – 1 கப்
 வெல்லத்தூள் – 2 கப்
 ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை:
கறுப்பு எள்ளை பத்து நிமிடம் ஊற வைக்கவும். வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவும். எள்ளைக் களைந்து, ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி, வெயிலில் உலரவிடவும். லேசாக ஈரம் இருக்கும்போது வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வெடிக்கும்படி வறுக்கவும். ஆறிய பின் எள், வேர்க்கடலை, வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக்கவும்.


ஸ்டஃப்டு இட்லி

தேவையானவை:
 இட்லி மாவு – 1 கப்
 உருளைக்கிழங்கு, கேரட் – தலா 1
 பச்சை மிளகாய் – 2
 இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன்
 உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கு, கேரட்டை வேகவைத்து, தோல் நீக்கி மசித்து… உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். இட்லித் தட்டுகளில் ஈரமான துணியை போட்டு பாதி அளவு இட்லி மாவு ஊற்றவும். அதன் மீது உருளைக்கிழங்கு கலவை சிறிதளவு வைக்கவும். பிறகு, அதன் மேல் சிறிதளவு இட்லி மாவை ஊற்றவும். ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.


ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சாட்

தேவையானவை:
 விரும்பிய பழக்கலவை – ஒரு கப்,
பாதாம், முந்திரி, பேரீச்சை  – தலா 10
 சாட் மசாலாத்தூள் – சிறிதளவு
 மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெறும் வாணலியில் பாதாம், முந்திரியை வறுக்கவும். பேரீச்சையின் கொட்டைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் பழக்கலவை, பாதாம், முந்திரி, பேரீச்சை, சாட் மசாலாத்தூள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


எண்ணெயில்லா ஊறுகாய்

தேவையானவை:
 எலுமிச்சைப் பழம் – 10
 பச்சை மிளகாய் – 5
 இஞ்சித் துருவல் – 4 டீஸ்பூன்
 உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
எலுமிச்சைப் பழத்தை நன்கு கழுவி, சுத்தம் செய்து துடைத்து, சிறிய துண்டுகளாக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் எலுமிச்சைத் துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், இஞ்சித் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். மூன்று நாட்கள் ஊறிய பின் பயன்படுத்தலாம்.


பஞ்சாபி கடி

தேவையானவை:
 கெட்டியான மோர் – 2 கப்
 கடலை மாவு – 2 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 2
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
 உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கெட்டி மோரைக் கடைந்து கடலை மாவு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் கடுகை வறுத்து மோர் கரைசலை விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். பிறகு சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு:
கரைத்த மாவு தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


எண்ணெயில்லா வடை

தேவையானவை:
 பிரெட் துண்டுகள் – 10
 தயிர் – 1 கப்
 தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 2
 கேரட் துருவல், உப்பு,
  காய்ச்சிய பால் – தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுக்கவும், மிக்ஸியில் பிரெட் துண்டுகளைப் போட்டு பொடிக்கவும். பிறகு, தேவையான அளவு பால் தெளித்துப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டி நடுவே ஓட்டை போடவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தயிருடன் கலக்கவும். ஒரு தட்டில் வடைகளை அடுக்கவும். பிறகு, வடைகளின் மீது தயிர் கலவை, கேரட் துருவல், சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


பயறு அவல்

தேவையானவை:
 அவல் – ஒரு கப்
 பச்சைப் பயறு, கேரட் துருவல்,
  மாதுளை முத்துக்கள் – தலா கால் கப்
 வெங்காயம் – 1
 உப்பு – தேவைக்கேற்ப
 எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை:
பச்சைப் பயறை முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அவலை ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு கல், மண் போக களையவும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், அவல், பயறு, கேரட் துருவல், மாதுளை முத்துகள் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


நட்ஸ் ஹனி ரோல்ஸ்

தேவையானவை:
 பாதாம், பிஸ்தா,
  முந்திரி, பேரீச்சை – தலா 50 கிராம்
 வேர்க்கடலை, பொட்டுக்கடலை   – தலா 5 டீஸ்பூன்
 தேன் – தேவையான அளவு

செய்முறை:
வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை, வேர்க்கடலையை தனித்தனியாக போட்டு வறுக்கவும்.  பேரீச்சையின் கொட்டையை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும். அரைத்த பொடி, தேன் ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து ரோல்களாக செய்யவும்.


தேங்காய் லட்டு

தேவையானவை:
 தேங்காய்த் துருவல் – 1 கப்
 கண்டன்ஸ்டு மில்க் – தேவையான அளவு

 

செய்முறை:
அடிகனமான வாணலியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுக்கவும். பிறகு, இதனுடன் தேவையான அளவு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி இறக்கவும். ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.


மில்லட் புட்டு

தேவையானவை:
 சிறு தானிய சத்து மாவு – 1 கப்
 சர்க்கரை, தேங்காய்த் துருவல்   – தேவையான அளவு
 உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:
வெறும் வாணலியில் சத்து மாவை போட்டு லேசாக வறுக்கவும். ஆறிய பின் உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். பிறகு ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். மேலே சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


எண்ணெயில்லா பக்கோடா

தேவையானவை:
 கடலை மாவு – 1 கப்
 வெங்காயம் – 1
 பச்சை மிளகாய் – 2
 உப்பு – தேவைக்கேற்ப
 கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து பிசிறவும். பிறகு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். மினி இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கலாம், அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவை கைகளால் கிள்ளிப் போட்டு வேகவிட்டு எடுக்கலாம்.


ராஜஸ்தானி தால்

தேவையானவை:
 பச்சைப் பயறு – 1 கப்
 கடலைப்பருப்பு – சிறிதளவு
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 வெங்காயம், தக்காளி – தலா 1
 பச்சை மிளகாய் – 2
 சீரகம் – 1 டீஸ்பூன்
 உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊற விடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். மறுநாள் பச்சைப்பயறைக் களைந்து அதனுடன் கடலைப்பருப்பு சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். வாணலியில் சீரகம் சேர்த்து பொரியவிடவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு வேகவிடவும். இதனுடன் உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

Loading...
1416
-
Rates : 0