சண்டே ஸ்பெஷல்

Loading...

சாக்லேட் பால்ஸ் இன்
*கஸ்டர்ட் சாஸ்
* பாலக் தாலி பித் (கீரை அடை)
* பூரி பரோட்டா
* உருளைக்கிழங்கு கறி
* குல்சா
* மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்)
* கேஷு தம் புலாவ்
* மக்னா மலாய் கறி
* தயிர் ராய்த்தா

வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும்கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே… ஞாயிறுதோறும் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே… இதோ குடும்பமே சேர்ந்து சமைத்து, ஒன்றாக அமர்ந்து கதைகள் பல பேசி, விருந்து உண்ணும் அனுபவத்துக்குத் தயாராகுங்கள். அதற்காகவே அருமையான ரெசிப்பிகளை அளிக்கிறார் ரெசிப்பி ராணி சந்திரலேகா ராமமூர்த்தி.


சாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ்
 
தேவையானவை:
 பால் – 2 கப்
 சர்க்கரை – அரை கப்
 கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
 சாக்லேட் பிஸ்கட் – 10
 துருவிய சாக்லேட் அல்லது
 சாக்லேட் சிப்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ்,
 நட்ஸ் – தேவையான அளவு

செய்முறை:
பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரைச் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொதிக்கவிடவும். கெட்டியாக தோசை மாவு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

சாக்லேட் பிஸ்கட்டுகளை கரகரப்பாகப் பொடிக்கவும். பிறகு பாலுடன் கலக்கவும். சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து,  மேலே துருவிய சாக்லேட் அல்லது சாக்லேட் சிப்ஸ், பொடித்த ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் தூவிப் பரிமாறலாம்.


பாலக் தாலி பித் (கீரை அடை)
 
தேவையானவை:
 பாலக் கீரை – நறுக்கியது
 கோதுமை மாவு – தலா ஒரு கப்
 கடலை மாவு – அரை கப்
 கம்பு மாவு, அரிசி மாவு – தலா கால் கப்
 உப்பு, பச்சை மிளகாய்,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
 எண்ணெய் – தேவைக்கு
 மஞ்சள், இஞ்சி, சீரகம் –
தலா ஒரு டீஸ்பூன்
 ஓமம் – சிட்டிகை
 சர்க்கரை – அரை டீஸ்பூன்
 தயிர் – அரை கப்

செய்முறை:
இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயை மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு, அரிசி மாவு, கீரை, உப்பு, தயிர், சர்க்கரை, ஓமம், மிளகாய் தூள், அரைத்த பொடிச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதமாக பிசையவும். பிறகு சிறிது எண்ணெய் தடவி மூடி அரைமணி நேரம் வைக்கவும்.

மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாழை இலையில் மாவை வைத்து தட்டவும். சூடான தவாவின் மேல் போட்டு இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு கரகரப்பாக வேகவைத்து எடுக்கவும்.


பூரி பரோட்டா
 
தேவையானவை:
 மைதா மாவு – 2 கப்
 உப்பு – அரை டீஸ்பூன்
 சோள மாவு – 3 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
 நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
மைதாவுடன் சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும். மேலே சிறிதளவு எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை அடித்துப் பிசைய வேண்டும். பிசைந்த மாவில் நெய் தடவி மீண்டும் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கிப் பூரிகளாகத் தேய்க்கவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


உருளைக்கிழங்கு கறி
 
தேவையானவை:
 உருளைக்கிழங்கு – 4
 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
 காஷ்மீர் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
 கொத்தமல்லி – அலங்கரிக்க
 உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
உருளைக்கிழங்கைக் கழுவிச் சதுரமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு காயவைத்து சீரகம் போட்டு வெடித்ததும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், காஷ்மீரீ மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கரைத்து, உருளைக்கிழங்குடன் சேர்த்து மூடி, சிறிது நேரம் வேக விடவும். குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி, பூரி அல்லது புரோட்டாவுடன் சூடாகப் பரிமாறவும்.


குல்சா
 
தேவையானவை:
 மைதா – 2 கப்
 சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்
 ஈஸ்ட் – கால் டீஸ்பூன்
 வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்
 ராஜ்மா – ஒரு கப்
 தக்காளி, வெங்காயம் – தலா 2
 சீரகம், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
 கரம் மசாலா – ஒரு சிட்டிகை
 உப்பு, எண்ணெய், பால் –
தேவையான அளவு
 பச்சைமிளகாய், இஞ்சி,
கொத்த மல்லித்தழை,
எலுமிச்சைச்சாறு – அலங்கரிக்க.

செய்முறை:
ஈஸ்டை பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும். மைதாவுடன் சர்க்கரை, உப்பு, வெண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்து பிசையவும். இதுவே பேஸ். ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.

பேஸ்-இல் இருந்து ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிது கனமான ரொட்டியாக தட்டவும். தவாவில் ரொட்டியைப் போட்டு எண்ணெய்விட்டு மூடி போட்டு வேக விடவும். பின் ரொட்டியை திருப்பிப் போட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும். சூடான குல்சாவின் மேல் ராஜ்மாவைப் பரப்பி அதன் மேல் மிக பொடியாக வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு கொண்டுத் தூவி அலங்கரித்துப் பாரிமாறவும்.


மசூர்டால் புலாவ் (ராஜஸ்தானி ஸ்பெஷல்)

தேவையானவை:
 பாசுமதி அரிசி – ஒரு கப்
 மசூர் பருப்பு – அரை கப்
 வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
 பச்சைப்பட்டாணி, கேரட்,
  பீன்ஸ் கலவை – ஒரு கப்
 பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை – தலா 2
 இஞ்சி-பூண்டு விழுது, சீரகம்,
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 2
 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
 எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் – இரண்டரை கப்
 கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 முந்திரி – தேவையான அளவு
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், உப்புச் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா, மஞ்சள்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், பருப்பு, அரிசி, தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும். இதில் சூடான நீர் இரண்டரை கப் விட்டு, மிதமான தீயில் மூடி வேகவிடவும். முந்திரியை வறுத்துத் தூவவும். கொத்தமல்லித்தழைத் தூவி ராய்தாவுடன் பரிமாறவும்.


கேஷு தம் புலாவ்

தேவையானவை:
 பாசுமதி அரிசி – 2 கப்
 பெரிய வெங்காயம் – ஒன்று
 சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
 பட்டை – ஒரு துண்டு
 பிரிஞ்சி இலை – 2
 எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
 பனீர் – 50 கிராம்
 வெள்ளித்தாள் –
  தேவையான அளவு
 முந்திரி – 20
 சர்க்கரை – சிறிது
 உப்பு, மஞ்சள்தூள் –
தேவையான அளவு

அரைக்க:
 பச்சை மிளகாய் – 2
 புதினா இலைகள்- 10
 பூண்டு – 4 பல்
 இஞ்சி – ஒரு துண்டு
 உப்பு – சிட்டிகை
 கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ – தலா சிறிதளவு

செய்முறை:
பனீரைச் சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கவும். உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்குத் தேய்த்து அழுத்தி பிசறி, சிறுசிறு கோலிகளாக உருட்டி, வெள்ளித்தாளில் சுற்றிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைக்கவும். பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து, உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும். மீதி உள்ள நெய், எண்ணெய்விட்டு, சீரகம், பட்டை (உடைத்தது), பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிவக்கும் வரை வறுத்து, பின் அரைத்த விழுதைச் சேர்க்கவும். சர்க்கரை, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சாதத்தைச் சேர்த்து உடையாமல் கலக்கவும். பனீரை புலவில் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, குங்குமப்பூத் தூவி அலங்கரிக்கவும்.


மக்னா மலாய் கறி
 
தேவையானவை:
 தாமரைக்காய் பதப்படுத்தியது –
(மக்னா) 200 கிராம்
 பச்சைப் பட்டாணி – 50 கிராம்
 வெங்காயம், தக்காளி – தலா 2
 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
 கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், வெண்ணெய், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
 ஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன்
 முந்திரி – 10
 பச்சை மிளகாய் – 2
 சர்க்கரை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி அரைக்கவும். முந்திரியை விழுதாக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய், எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கிளறவும். உப்பு, முந்திரி விழுது, பச்சைப் பட்டாணி, சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். கால் கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும், ஃப்ரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி வைக்கவும். பின் வேறு ஒரு கடாயில் சிறிது எண்ணெயில் தாமரைக் காயை வறுத்து கிரேவியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

(மக்னா: தாமரைக்காயை உலரவைத்து பதப்படுத்துவது.)


தயிர் ராய்த்தா
 
தேவையானவை:
 பெரிய வெங்காயம் – 2
 பச்சை மிளகாய் – 2
 புளிப்பு இல்லாத கெட்டி தயிர் – ஒரு கப்
 தேங்காய்த்துருவல் – சிறிதளவு
 உப்பு – தேவையான அளவு
 
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். தயிரைக் கடையவும். பிறகு இத்துடன் தேங்காய்த்துருவல், உப்பு கலந்து பரிமாறவும்.

இரண்டாவது முறை:
 துருவிய வெள்ளரிக்காய் – ஒன்று
 பொடித்த கொத்தமல்லி,
பச்சை மிளகாய் – சிறிது
 உப்பு – தேவையான அளவு
 கேரட் (துருவிக்கொள்ளவும்) – 2
 கெட்டித் தயிர் – 2 கப்
இவை எல்லவற்றையும் கலந்து புலாவுக்கு, பச்சடி போலப் பரிமாறலாம்.

மூன்றாவது முறை:

 பழக்கலவை (ஆப்பிள், பைனாப்பிள்
 மாதுளை மற்றும் வாழைப்பழம்) – தலா அரை கப்
 உப்பு – ஒரு சிட்டிகை
 வடித்த தயிர் – ஒரு கப்
 வறுத்துப் பொடித்த சீரகத்தூள்
இவை எல்லாவற்றையும் கலந்து இனிப்பான ராய்த்தா செய்யலாம்.

Loading...
1578
-
Rates : 0