ஈவ்னிங் டிபன் ரெசிப்பி

Loading...

வெஜ் ஊத்தப்பம்
 வெஜ் நூடுல்ஸ்
 புதினா சப்பாத்தி
 வெஜ் பணியாரம்
 மல்ட்டி கலர் பூரி
 ஜவ்வரிசி உப்புமா
 அவல் நெய் புலாவ்
 வரகு வெஜ் பொங்கல்
 வெஜ் இட்லி

‘பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள் விரும்பும் வகையில் என்ன டிபன் செய்து கொடுக்கலாம்? காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, அந்த ஊட்டச்சத்தை எப்படி அளிக்கலாம்?’ என்பவை போன்ற கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் டி.புவனேஸ்வரி வழங்கும் சத்தும் சுவையும் நிறைந்த ரெசிப்பிகள் விடையாக அமையும்!

வெஜ் ஊத்தப்பம்

தேவையானவை:

 இட்லி அரிசி – கால் கிலோ
 உளுத்தம்பருப்பு – 150 கிராம்
 பீன்ஸ் – 10
 கேரட் – ஒன்று
 உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: கேரட்டைத் துருவவும். பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து  ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து மாவாக அரைக்கவும். மாவை மூன்று மணி நேரம் புளிக்கவிடவும். அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஊத்தப்பம் மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் ஆகியவற்றை ஊத்தப்பம் மீது தூவவும். தேவையான அளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை:

 பிளெய்ன் நூடுல்ஸ் – கால் கிலோ
 வெங்காயம், தக்காளி, கேரட்  –  தலா ஒன்று
 பீன்ஸ் – 100 கிராம்
 பச்சைப் பட்டாணி – கைப்பிடியளவு
 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு – கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 பச்சை மிளகாய் – 3
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: நூடுல்ஸை இரண்டு நிமிடங்கள் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி எடுக்கவும். பட்டாணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட்டைப் பொடியாக நறுக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து… காய்கறிக் கலவை, உப்பு சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர்விட்டு மூடி, முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவிடவும். பின்னர் வேகவைத்த பட்டாணி, நூடுல்ஸை போட்டுக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

குழந்தைகள் நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடுவது வழக்கம். ரெடிமேட் நூடுல்ஸாகக் கொடுக்காமல், காய்கறிகள் கலந்த இந்த நூடுல்ஸ் செய்து கொடுப்பது மிக நல்லது.


புதினா சப்பாத்தி

தேவையானவை:

 கோதுமை மாவு – ஒரு கப்
 புதினா (ஆய்ந்தது) – கால் கப்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
புதினாவைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கொஞ்சம் எண்ணெய், புதினா, உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்குத் திரட்டுவது போலவே திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி,  புதினா சப்பாத்திகளைப் போட்டு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இந்தச் சப்பாத்தி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.


வெஜ் பணியாரம்

தேவையானவை:

 இட்லி அரிசி – கால் கிலோ
 உளுத்தம்பருப்பு – 100 கிராம்
 பெரிய வெங்காயம் – 2
 கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு (தாளிக்க) – அரை டீஸ்பூன்
 கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் – 3
 கேரட், பீன்ஸ் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்)
 பச்சைப் பட்டாணி – கைப்பிடியளவு
 கறிவேப்பிலை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, இட்லி மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். மாவைப் புளிக்கவிடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். மாவில் தண்ணீர் சேர்த்து பணியார மாவு பதத்துக்கு கலக்கவும். பணியாரக்கல்லை சூடாக்கி, குழிகளில் எண்ணெய்விட்டு, மாவை ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.


மல்ட்டி கலர் பூரி

தேவையானவை:

 கோதுமை மாவு – ஒரு கப்
 பீட்ரூட் துருவல், கேரட் துருவல், புதினா – தலா கால் கப்
 தண்ணீர், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கோதுமை மாவை மூன்றாகப் பிரித்து, மூன்று பாத்திரங்களில் சேர்க்கவும். முதல் பாத்திரத்தில் மாவுடன் புதினா, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்்குப் பிசையவும். இரண்டாவது பாத்திரத்தில் மாவுடன் கேரட் துருவல், உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்்குப் பிசையவும். மூன்றாவது பாத்திரத்தில் மாவுடன் பீட்ரூட் துருவல், உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி பூரிக்குத் திரட்டுவது போலவே திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.


ஜவ்வரிசி உப்புமா

தேவையானவை:

 ஜவ்வரிசி – ஒரு கப்
 வேர்க்கடலை – கால் கப்
 பெரிய வெங்காயம் – ஒன்று
 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து. பிறகு வடிகட்டவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளிக்கவும். இதனுடன்  ஜவ்வரிசி, உப்பு சேர்த்துக் கிளறி, வேர்க்கடலைப் பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


அவல் நெய் புலாவ்

தேவையானவை:

 அவல் – ஒரு கப்
 பெரிய வெங்காயம் – ஒன்று
 பச்சை மிளகாய் – 2
 நெய் – 4 டீஸ்பூன்
 பட்டை, கிராம்பு – தலா 2
 பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். அவலை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். தண்ணீரை வடிகட்டி எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு பட்டை,  கிராம்பு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அவல் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:

புளிப்புச்சுவை தேவையெனில் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து தயாரிக்கலாம்.


வரகு வெஜ் பொங்கல்

தேவையானவை:

 வரகு அரிசி – கால் கிலோ
 பாசிப்பருப்பு – 100 கிராம்
 மிளகு – 3 டீஸ்பூன்
 சீரகம் – 2 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 2
 இஞ்சித் துருவல்- 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுக்கவும். வரகரிசியைக் களைந்து வடிகட்டவும். குக்கரில் அரிசி, பாசிப்பருப்பு, நான்கு கப் தண்ணீர், உப்பு சேர்த்து மூடி, ஆறு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் நெய் விட்டு மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சித்  துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வேகவைத்த கலவையைச் சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கவும்.


வெஜ் இட்லி

தேவையானவை:

 அரிசி – 2 கப்
 உளுத்தம்பருப்பு – அரை கப்
 பீன்ஸ், கேரட் துண்டுகள் – தலா கால் கப்
 பச்சைப் பட்டாணி – 5 டீஸ்பூன்
 கோஸ் துருவல் – சிறிதளவு
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து  இட்லி மாவு போல அரைக்கவும். மாவைப் புளிக்கவிடவும். வெஜ் இட்லி தயாரிக்கும் சமயத்தில் ஒரு பாத்திரத்தில் காய்கறிகளுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். இட்லித்தட்டில் மாவை ஊற்றி, அதன்மீது பச்சைப் பட்டாணி, காய்கறிக் கலவையைத் தூவி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Loading...
1052
-
Rates : 0