பூ ரெசிப்பி

Loading...

பூ ரெசிப்பி

 

 செம்பருத்திப்பூ தோசை
 கிரிஸ்பி ஃப்ரைடு காலிஃப்ளவர்
 ரோஸ் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக்
 வேப்பம்பூ சூப்
 புரோக்கோலி ஃப்ரை
 ரோஸ் மிண்ட் ஜூஸ்
 முருங்கைப்பூ கூட்டு
 ஆவாரம்பூ டீ
 தாமரைப்பூ ஜூஸ்
 வாழைப்பூ போண்டா

பூக்களைக்கொண்டு ஜூஸ், மில்க்‌ஷேக், சூப், தோசை, போண்டா என விதவிதமாக, வித்தியாசமாக செய்துகட்டி அசத்துகிறார் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

செம்பருத்திப்பூ தோசை

தேவையானவை:

 தோசை மாவு – ஒரு கப்
 செம்பருத்திப்பூ – 10
 மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
 வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 கடுகு – கால் டீஸ்பூன்
 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: செம்பருத்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்து சுத்தம் செய்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் தோசை மாவுடன் செம்பருத்தி விழுது, வெங்காயக் கலவை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

இதயத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.


கிரிஸ்பி ஃப்ரைடு காலிஃப்ளவர்

தேவையானவை:

 காலிஃப்ளவர் – ஒன்று
 மைதா – ஒரு கப்
 சேமியா – அரை கப்
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
 கார்ன்ஃ்ப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: வெறும் வாணலியில் சேமியாவை வறுக்கவும். ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும். காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கட்டு இறக்கவும். அதில் காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து பத்து நிமிடம் வைக்கவும். பிறகு நீரை வடிகட்டவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பூக்களை மைதா கலவையில் முக்கி எடுத்து சேமியாவில் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பூக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

குட்டீஸ் விரும்பும் ஃப்ரை இது!


ரோஸ் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக்

தேவையானவை:

 வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு கப்
 பால் – அரை லிட்டர்
 ரோஸ் சிரப் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடக்கும்) – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்டக் காய்ச்சி, ஆறவிடவும். மிக்ஸியில் ஐஸ்க்ரீம், பால், ரோஸ் சிரப் சேர்த்து அரைக்கவும். பின்னர் குளிரவைத்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி பரிமாறவும்.


வேப்பம்பூ சூப்

தேவையானவை:

 வேப்பம்பூ – 4 டீஸ்பூன்
 காய்கறிகள் வேகவைத்த நீர் – ஒரு கப்
 உப்பு , மிளகுத்தூள், வெண்ணெய் – தேவைக்கேற்ப
 
செய்முறை: வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். இதனுடன் காய்கறிகள் வேகவைத்த நீர், உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


புரோக்கோலி ஃப்ரை

தேவையானவை:

 புரோக்கோலி பூக்கள் (பெரிய பூவில் இருந்து `கட்’ செய்தது) – 10
 கடலை மாவு – 2 டீஸ்பூன்
 அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
 ஆம்சூர் பவுடர், தனியாத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: புரோக்கோலி பூக்களைக் கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் புரோக்கோலி பூக்களைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு, கலந்துவைத்த பொடியைத் தூவி ஃப்ரை செய்து இறக்கவும்.


ரோஸ் மிண்ட் ஜூஸ்

தேவையானவை:

 ரோஜாப்பூ – 10
 சர்க்கரை – தேவைக்கேற்ப
 எலுமிச்சைப் பழம் – ஒன்று
 புதினா இலைகள் – 10
 தோல் சீவிய துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

செய்முறை: பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இதனுடன் கழுவிய ரோஜா இதழ்களைப் போட்டு ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். ஆறியபின் வடிகட்டவும். புதினா இலைகளுடன் சிறிதளவு தண்ணீர், இஞ்சித் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, வடிகட்டிய ரோஜா சிரப் சேர்த்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.


முருங்கைப்பூ கூட்டு

தேவையானவை:

 முருங்கைப்பூ – ஒரு கப்
 பாசிப்பருப்பு – கால் கப்
 தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 2
 கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை
 கறிவேப்பிலை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: முருங்கைப்பூவைச் சுத்தம் செய்து பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, பருப்புக் கலவை, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.


ஆவாரம்பூ டீ

தேவையானவை:

 ஆவாரம்பூ – கைப்பிடியளவு
 தேன் – தேவைக்கேற்ப
 தண்ணீர் – ஒரு கப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் ஆவாரம்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வடிகட்டி தேன் சேர்த்து சூடாகப் பருகவும்.

குறிப்பு:

இந்த டீ, நீரழிவுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நலம் அளிக்கும்.


தாமரைப்பூ ஜூஸ்

தேவையானவை:

 தாமரைப்பூ – ஒன்று
 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
 சர்க்கரை – தேவைக்கேற்ப
 உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை: தாமரைப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்து சுத்தம் செய்யவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், தாமரைப் பூவின் இதழ்கள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி, இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


வாழைப்பூ போண்டா

தேவையானவை:

 வாழைப்பூ – ஒன்று (ஆய்ந்து நறுக்கவும்)
 கடலைப்பருப்பு – ஒரு கப்
 காய்ந்த மிளகாய் – 4
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். பருப்புடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பிசைந்த கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

– படங்கள்: மீ.நிவேதன்

Loading...
548
-
Rates : 0